‘எட்டு வருட ஆய்வின் பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.’

தொடர்ச்சியாக எட்டு வருடங்கள் உண்மையைத் தேடி பல மதங்களை ஆய்வுசெய்த பின் கடைசியாக, ‘அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் தான்’ என்ற இறைவசனத்தை ஏற்றுக்கொண்டவராக, அல்லாஹ்வை நோக்கிய தனது பயணத்தை உறுதிப்படுத்திய வண்ணம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் கிறிஸ்துவராக இருந்த, பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ‘ரிகாடோ ஸாட்’.

ரிகாடோவின் உண்மையைத் தேடிய பயணம் தன் தந்தை மரண தருவாயை அடைந்ததிலிருந்து ஆரம்பிக்கின்றது. தந்தையின் மரண தருவாயின் போது தந்தையோடே இருந்தார்.

பொதுவாக, அநேகமான கிறிஸ்துவர்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை அறிகின்றார்கள். எனினும், பதவி, அந்தஸ்து போன்றவற்றின் மீதுள்ள பற்றுக் காரணமாக அநேகமானோர், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை ஏற்றுக்கொள்ளாமல், உண்மையை மறைத்தவர்களாகவே மரணிக்கின்றார்கள்.

ஆனாலும் ரிகாடோவின் தந்தை தனது மகன் உண்மையை அடைந்துகொள்ளவேண்டும் என விரும்பினார். தனது மகன் வயதுக்குச் செல்லும் போது மார்க்கமற்ற (நாஸ்திகனாக) மாறிவிடுவானோ என்று பயந்தார். எனவே தனது மகனைப் பார்த்து கடைசி உபதேசமாக, ‘எனது மகனே! மதங்களையே மறுத்து நாத்திகனாகும் அளவு எப்போதாவது உனக்கு சந்தேகம் ஏற்பட்டால் இஸ்லாத்தைப் பற்றி நீ தேடு’ என்று கூறினார்.

தந்தையின் இந்தக் கடைசி உபதேசம் ரிகாடோவின் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. தனது தந்தை வாழும் காலத்தில் அவரிடத்தில் ஒரு குர்ஆன் பிரதி இருந்ததையும், அதை அவர் சில நேரங்களில் வாசிப்பதையும் ரிகாடோ நினைவுபடுத்திப் பார்த்தார்.

நாட்கள் புரண்டோடின.. ரிகாடோ மதங்கள் பற்றிய ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டார். அவருடைய ஆய்வுகள் முன்னேற, கிறிஸ்துவ மதம் பற்றிய அவரது சந்தேகங்களும் அதிகரித்தன. இறைவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்கமுடியும்? மூன்று கடவுள்களில் ஒருவனாக இறைவன் எவ்வாறு இருக்கமுடியும்? போன்ற பல கேள்விகள் அவரை மேலும் சிந்திக்கத் தூண்டின. இச்சந்தர்ப்பத்தில் ரிகாடோவுக்கு தனது தந்தை எட்டு வருடங்களின் முன் செய்த இறுதி உபதேசம் நினைவுக்கு வந்தது. உடனே, இஸ்லாத்தைப் பற்றிய தனது ஆய்வைத் துவங்கினார்.

தனது தந்தை வைத்திருந்த குர்ஆன் பிரதியைத் தேடினார். எனினும் அவரால் அதைப் பெற்றுகொள்ள முடியவில்லை. அவரது தந்தை ஏற்கனவே அதை அவரது சகோதரருக்குக் கொடுத்திருந்தார். குர்ஆனின் போர்த்துகேய மொழிபெயர்ப்பொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்தார். அதற்காக பலரிடம் தொடர்புகொண்டு கேட்டார். எனினும் அவரது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இறுதியாக, குர்ஆன் மொழிபெயர்ப்புகளை விற்பவை செய்யும் இணையதளமொன்றைப் பெற்றுக்கொண்டார். அதன் மூலம் குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதியொன்றைப் பெற்றுக்கொண்ட அவர் இஸ்லாம் பற்றிய தனது ஆய்வைத் தொடங்கினார். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு தடவைகள் குர்ஆனை வாசித்து முடித்தார். அதன் பின் அவரது உள்ளம் மாறத்துவங்கியது. எனினும் சந்தேகங்கள் அவரைத் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

இணையதளத்தில் நுழைந்தார். ஏனைய மதங்களில் உள்ள முரண்பாடுகளை எடுத்துவைத்தார். ஏனைய பிரேசில் மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இஸ்லாத்துக்கு சார்பாக எழுத ஆரம்பித்தார்.

சென்ற ரமழான் மாதம், பிரேஸிலின் ஒரு பள்ளிவாயில் நுழைந்தார். அப்பள்ளிவாசலின் இமாம் அவரிடம் மக்களுடன் சிறிது நேரம் பேசுமாறு வேண்டிக் கொண்டதும், ‘நான் இதுவரை ஒரு கிறிஸ்துவனாகத் தான் இருக்கின்றேன். எனினும் உலகிலேயே மிகச்சிறந்த ஒரு பொக்கிஷம் முஸ்லிம்களிடத்தில் தான் உள்ளது என்ற ஒரு உண்மையை முஸ்லிம்களுக்கு உணர்த்த விரும்புகின்றேன். அது தான் புனித குர்ஆன். முஸ்லிம்கள் அதை வைத்துப் பெருமைப்பட வேண்டும். அதற்குரிய உரிமையை வழங்கவேண்டும்.’ என்று கூறினார்.

மேலும், ‘இந்தக் குர்ஆனை நான் பல தடவைகள் வாசித்துள்ளேன். இது மனிதனின் வார்த்தைகள் அல்ல என நான் உறுதியாகக் கூறுகின்றேன்.’ என்றும் கூறினார்.

சென்ற கிறிஸ்மஸ் தினமன்று, தன்னிடம் எஞ்சியிருந்த சில சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக அதே பள்ளிவாசலில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில முஸ்லிம்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொணடார். அங்கு அவரது ஒரு நண்பர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். எனினும் இவருடைய சில சந்தேகங்கள் இவரைத் தடுத்துக்கொண்டிருந்தது. தனக்கு இன்னும் நேரம் வரவில்லை என மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

அந்தப் பள்ளிவாயலின் இமாமான ‘தகிய்யுத்தீன்’ என்பவர் கூறுகின்றார். : ‘ஒரு நாள் காலையில் ஜும்ஆத் தொழுகைக்காக நான் பள்ளிhசலுக்குச் சென்ற போது அங்கு ரிகாடோ சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருப்பதைக் கண்டேன். ‘இன்று நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதை அறிவிக்க வந்துள்ளேன்’ என அவர் என்னிடம் கூறினார். இச்செய்தியைக் கேட்டதும் எனது உள்ளம் பூரித்துப் போனது.’

ஜும்ஆத் தொழுகை முடிவடைந்தது. தனது எட்டு வருட ஆய்வு, சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்தவராக மக்கள் முன்னிலையில் வந்து ரிகாடோ தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, கலிமாவை மொழிந்தார்.

அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைப் பார்த்த அங்கு வந்திருந்த இன்னுமொரு கிறிஸ்துவப் பெண்மணயும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

நன்றி : albushraa.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.