“எமக்குள் உள்ள பிளவுகளே இஸ்ரேலின் வரம்பு மீறலுக்குக் காரணம்” – சவுதி வெளியுறவு அமைச்சர்
இஸ்ரேல்
இஸ்ரேல் காஸா மக்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளும் நாசகார நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய உம்மத்தே ஒட்டுமொத்தமாக பதில் சொல்லவேண்டும் என சவுதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சர் “சுஊத் அல்பைஸல்” தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்லாமிய உம்மத் முழுவதுமாக ஒரே உள்ளம் போன்று ஒற்றுமையாக இருந்தால் இவ்வாறு பல தடவைகள் தாக்குவதற்கு இஸ்ரேல் சக்தி பெற்றிருக்குமா?” எனவும் அவர் வினவியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜித்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறும் போது, “ஆக்கிரமிப்பு இஸ்ரேல் காசாவில் மேற்கொள்ளளும் அநியாயங்களுக்கு நாங்கள் அனைவருமே பொறுப்பு. அதிலிருந்து எங்களால் நீங்கிக் கொள்ள முடியாது. இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை எங்கே ? ஏன் நாம் இதுவரை ஒற்றுமை அற்றவர்களாகவும், பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம் ?” எனவும் வினவியுள்ளார்.
“முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் பல பிரிவுகளாகப் பிரிந்து, அவர்களுக்கு மத்தியில் குழப்பங்கள் அதிகரித்துள்ளதால் தானே இஸ்ரேலை பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தத் தூண்டுகிறது.?” என்றும் வினவியுள்ளார்.
“மார்க்கம் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் உயிரைக் கொல்கிறான். இதனால் தானே வெளிநாட்டு சக்திகள் எங்களுக்குள் நுழைந்து குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்லாமிய உம்மத் அனைவரும் ஒற்றுமைப்படவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.