“ஒருவேளை இவ்விமானமும் காணாமல் போனால், இது தான் தோற்றம்” – முன்கூட்டியே எதிர்வு கூறிய பயணி!

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய நோக்கி புறப்பட்ட MH17 விமானம் உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டதால் அவ்விமானத்தில் பயணித்த 295 பேரும் நேற்று உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட முன்னர் அதன் பயணிகளில் ஒருவரான நெதர்லாந்து நாட்டுக் காரர் Cor Pan என்பவர், ஆம்ஸ்டர்டாம் சிபோல் விமானநிலையத்தில் வைத்து அவ்விமானத்தை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ‘ஒருவேளை இவ்விமானம் காணாமல் போனால், விமானத்தின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என அவர் கேலியாக பதிவிட்டிருந்த அப்பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் மிகப்பிரபலமடைந்துவருகிறது.

காரணம் அவர் எதிர்வுகூறியது போன்று இவ்விமானமும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டே பின்பு சுட்டு வீழ்த்தப்பட்டது தெரியவந்தது. Cor Pan இன் பேஸ்புக் புரொபைல் அவர் நெதர்லாந்தின் Volendam எனும் இடத்தைச் சேர்ந்தவர் என காண்பிக்கிறது. கடந்த மார்ச் 8ம் திகதி MH 370 எனும் மலேசிய விமானம் காணாமல் போனதுடன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று விபத்துக்கு உள்ளானதும் மலேசிய விமானம் என்பதனால், அவர் ஒப்பீட்டளவில் அப்பதிவை மேற்கொண்டிருந்தார்.

அவரது நண்பர்கள் Cor Pan இன் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், விபத்து நடந்த சில நிமிடங்களில் அவருக்கு எதுவும் ஆபத்து நிகழ்ந்திருந்ததா எனக் கேட்டிருந்தனர்.

பின்னர் Cor Pan இன் உறவினர் ஒருவர் Cor Pan விமானத்தில் இருந்ததை உறுதி செய்துள்ளார். குறித்த விமானம் 151  நெதர்லாந்து பயணிகளுடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : 4tamil media

You might also like

Leave A Reply

Your email address will not be published.